Thursday, June 23, 2011
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் – 543)
என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’
என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர்
தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு
வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா
ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே
தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும்
கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள்
செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில்
‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார்.
அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!
“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது
என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை,
மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது
முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள்
கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும்,
அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது
அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த
குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற
சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர்
வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட
அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர்.
பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும்
அதர்வண என்பன.
பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள்.
அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன்
எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” என்று அழத்தம் திருத்தமாக கூறுகிறது.
அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம்
என்பதும் வேறுப் பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்!
அவற்றையும் பார்ப்போம்!!
பரதச் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி
பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன்
என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய
பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத
க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக்
குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.
முதல் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல்
சக்கரவர்த்தியாவார்.
அந்தணர் என்போர் அறவோர்
சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே
பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.
இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார்
என்பதையும் பார்ப்போம்.
அந்தணர்கள் தோற்றம்5
பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள்
எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு,
தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு
ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன்
அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.
தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த
தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள்
தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மணையைப்
பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி
ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள்
வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம்,
பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை
அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான்.
அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு
வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து,
அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி
சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு
வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில்
சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு,
அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும்
போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள்
இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை
பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள்
என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட
அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)
என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.
முடிபு:
இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று
வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது
என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே
ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.
என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/
2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]
3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.
4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)
5 – ஸ்ரீ புராணம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஐயா பானுகுமாரன் அவர்களே!
வணக்கம். தங்கள் வலைப்பூவில் சிறிது சந்தேகம்.
"அந்தணர் நூற்கும்" என்பதற்கு, அந்தணர் பற்றியும், வேதங்கள் பற்றியும் கூறிய தாங்கள் கடைசியில் சமணர்களின் ஒரு பிரிவாக இருந்தவரே அந்தணர் என்பதாக முடிதுள்ளீர். "அந்தணர் நூற்கும்" என்பதற்கு அந்தணர் என்று மட்டும் பொருள் கூறினால் அது சரியா? அவர்தம் மூல நூல் என்பது எது? அப்படி மூல நூல் உடையவரையே இங்கு மகான் வள்ளுவர் குறிப்பிட்டாறேயனால் தற்போது வழக்கில் உள்ள அந்தணர் என்றே பொருளாகும்.
"நூற்கும்" என்பதற்கு "செய்யும்" என்று கொள்வோமேயானால், பேரறிஞர் பரிமேலழகர் உரை மிக பொருந்துமே!
மிக அழகாக கருத்தைக் கொண்டு சென்ற தாங்கள் கடைசியில் அவசரமாக முடித்ததுவேனோ? கருத்திலே செறிவு குறைந்ததோ?
சின்ன பையன்.
//பெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள்//
திருத்தம்: பெளருஷேயம் என்றால் ஒரு புருஷனால் இயற்றப்பட்டது என்று
பொருள்!
அ+பெளருஷேயம் = மனிதரால் இயற்றப்பட்டது அல்ல, என்று பொருள்!
//பரத சக்கரவர்த்தியே ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை. என்னை?//
:)
தவறாகத் தொனிக்கிறதே!
நீங்களே பதிவில் சொன்னது போல்,
//தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால்//
அப்படீன்ன்னா 'ஆதியாய்' நின்றது ரிஷப தேவர் அல்லவோ?
அவர் சொன்னதைக் கடைப்பிடித்து அல்லவா மக்கள் அப்படிச் செய்தனர்?
ஏன் இந்தக் குழப்பம்?
அப்படியானால் சமணம் தான் சாதிகளை உருவாக்கியதா ?
//அ+பெளருஷேயம் = மனிதரால் இயற்றப்பட்டது அல்ல, என்று பொருள்!//
நன்றி! திருத்திவிட்டேன்!
இரா,பா,
சென்னை
//"அந்தணர் நூற்கும்" என்பதற்கு, அந்தணர் பற்றியும், வேதங்கள் பற்றியும் கூறிய தாங்கள் கடைசியில் சமணர்களின் ஒரு பிரிவாக இருந்தவரே அந்தணர் என்பதாக முடிதுள்ளீர்.//
வைதிக வேதங்கள் சுயம்பு, யாவராலும் படைக்கப்பட்டதல்ல என்று சொல்லும் போது மன்னன் எவ்வாறு ஆதியாய்/முதலாகயிருக்க முடியும்? என்பதுதான் என் கேள்வி!
//"நூற்கும்" என்பதற்கு "செய்யும்" என்று கொள்வோமேயானால், பேரறிஞர் பரிமேலழகர் உரை மிக பொருந்துமே!//
நூற்கும் என்பதை செய்தல் என்றுப் பொருள் கொண்டாலும், பரிமேலழகர் கூறுவது போல அந்தணர் செய்திருக்க முடியாது! ஏனெனில், வேதங்கள் ”அபெளருஷேயம்” ;-)
//மிக அழகாக கருத்தைக் கொண்டு சென்ற தாங்கள் கடைசியில் அவசரமாக முடித்ததுவேனோ? கருத்திலே செறிவு குறைந்ததோ?//
இக்கட்டுரை எழுதவேண்டும் என்று நினைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. எழுத முடியவில்லை. கட்டுரையின் நோக்கம், “ குறளில் வரும் அந்தணர் என்போர் துறவோர், எந்த உயிரிக்கும் செந்தண்மைப் பூண்டு ஓழுகும் குணநலத்தார்” என்பதுதான்!
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
இரா.பா,
சென்னை
//அப்படீன்ன்னா 'ஆதியாய்' நின்றது ரிஷப தேவர் அல்லவோ?
அவர் சொன்னதைக் கடைப்பிடித்து அல்லவா மக்கள் அப்படிச் செய்தனர்?
ஏன் இந்தக் குழப்பம்?//
வாருங்கள் கேஆஎஸ்,
குழப்பம் எதுவும் இல்லை! சமண வரலாற்றின்படி, க்ஷத்திரியர்கள் தான் அந்தணர் வகுப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை சுட்டவே இக்கட்டுரை.
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)
குறள் திட்டவட்டமாக கூறுவதை நோக்குங்கால் என் கூற்றுப் புரிதல்படும்.
ஆதிபகவனும் மன்னர்தான். ஆனால் தன் மகன் போல் சக்கரவர்த்தியாக திகழவில்லை.
இரா.பா,
சென்னை
//அப்படியானால் சமணம் தான் சாதிகளை உருவாக்கியதா ?//
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” - 972 என்ற குறள் கூறுவதைப் பார்க்கவும். செய்யும் தொழிலால் வகைப்படுத்தப்பட்டனர். சாதி என்பது வேறு! வைதிக மதத்தினர் போன்று பிராமணன் தலையில் இருந்துப் பிறந்தவன்.... போன்ற பிறப்புவகைகள் சமணத்தில் இல்லை. பிறப்பு ஓக்கும் எவ்வுயிர்க்கும் என்பது சமணக் கோட்பாடு!
இரா.பா,
சென்னை
Post a Comment